இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் பொறுப்புகள் என்ன ? யாரெல்லாம் வாக்களிப்பார்கள் ?

நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதியவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் வரும் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார்.

யார் யார் வாக்களிக்கலாம் ?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். இதில் நியமன எம்.பி.க்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் நியமன எம்.பி.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகுதி மற்றும் விதிமுறைகள்

இந்திய குடிமகனாக இருந்து, குறைந்தது 35 வயது பூர்த்தி அடைந்தவர்கள் துணைத் தலைவர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும், மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதிகளும் அவசியம். வேட்பாளர் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஆக இருந்தால், தேர்ந்தெடுக்கப்படும் தருணத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து தானாகவே விலகியதாக கருதப்படுவார்.

பொறுப்புகள்

குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார். அவசரகால சூழலில் மாநிலங்களவை அமர்வை ஒத்திவைக்கவோ அல்லது நிறுத்தவோ அவருக்கு அதிகாரம் உண்டு.

அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்றாலும், புதிய துணைத் தலைவர் பதவியேற்கும் வரை தொடர்ந்தும் அந்தப் பொறுப்பில் இருப்பார்.

மேலும், குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் சூழலில் அல்லது உடல்நலக் குறைவு காரணமாக அவர் செயல்பட முடியாத நிலையில், துணைத் தலைவர் குடியரசுத் தலைவராகவும் செயல்படுவார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அது வெற்றி பெற்றால், துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் அரசமைப்பு சட்டம் அனுமதி அளிக்கிறது.

Exit mobile version