சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 7 முதல் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தும், தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் ராஜ்நாத் சிங் பேசி ஆதரவு திரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாகவும், இன்று மாலையும் இந்தியா கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.