வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க சார்பில் பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்புப் பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சித் தலைமையின் உத்தரவின்படி பூத் மட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தென்னம்பட்டி பழனிச்சாமி, கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ் மற்றும் மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ராஜமோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் ஜான்போஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை இப்போதிலிருந்தே போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “தமிழக அரசியல் வரலாற்றில் வேடசந்தூர் தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கு வெற்றி பெறும் கட்சியே மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வேடசந்தூர் தொகுதி நிர்வாகிகளுக்கு உள்ளது. பூத் முகவர்கள் ஒவ்வொரு வாக்காளரிடமும் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும். தலைமைக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக நீங்கள் செயல்பட வேண்டும். தேர்தல் பணிகளை முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் வெற்றி நமதே” என உற்சாகமாகப் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் அரசின் குறைகளை மக்களிடம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் பாபு சேட் நன்றி கூற, ஏராளமான கட்சி நிர்வாகிகள், பூத் முகவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க இப்போதே களப்பணிகளைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

















