சென்னை:
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மீது விமர்சனங்களை தெரிவித்த வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “நியாயமான விமர்சனங்களைக் கூட ஏற்க முடியாதவர், ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதற்கே தகுதியற்றவர்” என சீமான் தரப்பில் கடுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவருக்குமிடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக, திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தன்னை அவதூறு செய்யும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி 10 லட்சம் மான நஷ்டஈடு வழங்கவும், வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவுக்கான பதிலில், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் சிறை சென்றவர் வருண்குமார் என்பதும், ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றியபோது சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை வெளியிட்டதற்காக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருண்குமாரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; காவல்துறை அதிகாரியாக அவரது செயல்பாடுகளைப் பற்றியே கருத்து தெரிவித்ததாகவும், அந்த விமர்சனமே தாங்க முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பியதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கடுமையாக சாடப்பட்டுள்ளது. தன்னுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யவேண்டுமென சீமான் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு குறித்து அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதி தனபால் தள்ளி வைத்துள்ளார்.

















