குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எடுக்கும் முடிவையே ஏற்கிறோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ,
“சி.பி.ராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எனது நல்ல நண்பர்,” எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து,
“1998ஆம் ஆண்டு அ.தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தோம். அப்போது கோவை விமான நிலையத்திற்கு வாஜ்பாய் வந்தபோது, மக்களைச் சந்திக்கச் செய்ய சி.பி.ஆரிடம் நான் கூறினேன். பின்னர் நான் மூன்று நாட்கள் கோவையில் திறந்த வேனில் அவருக்காகப் பிரசாரம் செய்தேன். அதன் பலனாக அவர் வெற்றி பெற்றார்,” என்று பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெருமை தருவதாகவும்,
“வீரமும் விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு பகுதியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இந்த உயர்ந்த பொறுப்பை ஏற்க இருப்பது எங்களுக்கு பெருமை. அவர் மாநிலங்களவையை சிறப்பாக வழிநடத்துவார். அடுத்து குடியரசுத் தலைவராகவும் உயர வாய்ப்பு உண்டு,” எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேவேளையில்,
“குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் விவகாரத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தோழமைக்கட்சிகள் எடுக்கும் முடிவையே மதிமுக ஏற்றுக்கொள்ளும்,” என்று வைகோ தெரிவித்தார்