உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் இக்ரா ஹசனை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட காரணத்தால், கர்னி சேனா தலைவரான யோகேந்திர சிங் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோவில், “எம்.பி. இக்ரா ஹசன் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவரைவிட நான் குறைவாக இல்லாதவன். எனக்கேற்ப வீடுகளும் சொத்துகளும் உள்ளன. என் மனைவியிடமும் அனுமதி வாங்கிவிட்டேன். இக்ரா விரும்பினால் என்னை திருமணம் செய்துகொள்ளலாம். நான் அவரை வீட்டில் தொழுகை நடத்த அனுமதிக்கிறேன். ஆனால் ஒவைசி சகோதரர்கள் என்னை ‘மச்சான்’ என்று அழைக்க வேண்டும்” என ராணா பேசியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இந்தப் பேச்சு, நாடாளுமன்ற உறுப்பினரின் கண்ணியத்தையும் மத சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.டி. ஹசன் தெரிவித்ததாவது: “இது இக்ரா ஹசனுக்கு மட்டுமல்ல, முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அவமானம். அரசாங்கமும் நிர்வாகமும் மௌனமாக இருப்பது வருந்தத்தக்கது. உச்ச நீதிமன்றம் தானாகவே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவாதம் எழுந்த பின் ராணா தனது வீடியோவை வலைதளத்திலிருந்து நீக்கியிருந்தாலும், “தூக்கிலிட்டாலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன்” என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மொராதாபாத் மாநகரில் வழக்கறிஞர் சுனிதா சிங், “இது ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் எதிரானது” என்று தெரிவித்து, ராணா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ராணா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக நகர போலீஸ் மேல் அதிகாரி குமார் ரன்விஜய் சிங் உறுதிப்படுத்தினார்.