உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பலரை பயமுறுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வட இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகியுள்ளது. வெள்ளப் பெருக்கு குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்ததுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதியில் சுமார் 50 பேர் சிக்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
தகவல் அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மேலாண்மை படை உள்ளிட்ட குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த காட்டாற்று வெள்ளம் சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அப்பகுதியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.