வால்பாறை பகுதியில் உள்ள குறிப்பிட்ட 10 தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம், தொழிலாளர் துணை ஆணையரின் அழைப்பை ஏற்றுத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான வால்பாறை வீ. அமீது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட அதிபர் சங்கங்களுக்கும் (APA) இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரும்பாலான தோட்டங்களில் தினக்கூலியாக 475 ரூபாய் மற்றும் நிலுவைத் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கொங்கு மண்டலம், அக்ரோபாம், சஜிதா பிளாண்டேசன், சென்னியப்பா எஸ்டேட், மானாம் பள்ளி, அனலி, சிவா காபி, ஸ்ரீ ராம், பிளண்டிவேலி, சக்தி, அகதீஸ்வரா ஆகிய பத்து நிறுவனங்கள் மட்டும் ஒப்பந்தத்தை மதிக்காமல், குறைந்த ஊதியத்தையே வழங்கி வருகின்றன. இதனால் ஒரு தம்பதிக்குச் சுமார் 16,440 ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். “தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பணப் பலன்களை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; தவறினால் டிசம்பர் 20-ஆம் தேதி (நாளை மறுநாள்) அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்களைக் கண்டித்துப் பிரம்மாண்ட ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெறும்” எனத் தொழிற்சங்கங்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இப்பிரச்சனையில் தலையிட்ட தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்), தொழிற்சங்கங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று (டிசம்பர் 18) மாலை கோவையில் இது குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசின் இந்த அழைப்பை ஏற்று, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வீ. அமீது தெரிவித்துள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் ஏடிபி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி உள்ளிட்ட 9 முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே, அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
