அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரிகளை நாளை முதல் அமல்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவிற்கும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதன்மூலம் உக்ரைன் போருக்கு ஆதரவு அளிக்கின்றதாகவும் குற்றம்சாட்டி, கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்தது. இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்கள் மீது மொத்தம் 50 சதவீத வரி அமலாகிறது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத அபராத வரி ஆகஸ்ட் 27 அதிகாலை 12.01 மணி (EST) முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா–இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த கூடுதல் வரிகளை குறைந்தது 90 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று இருநாட்டு தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய விவசாயிகளின் நலனில் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படாது” என்று வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், தேசிய நலனையும் சந்தை விலையையும் கருத்தில் கொண்டு ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்முதல் சமீபத்தில் அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து வரிகள் குறைக்கப்படுமானால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.