தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு நாள் அரசு மற்றும் அரசியல் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை திருச்சி வருகை தந்தார். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., திருச்சி விமான நிலையத்தில் அமித்ஷாவை நேரில் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக வரவேற்றார். இந்த வரவேற்பின் போது மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உடனிருந்தனர். தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரை, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் மூத்த உறுப்பினர் வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அந்தமானில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குச் சென்று பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் இரவு மீண்டும் திருச்சி திரும்பிய அவர், தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்த அவர், தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ கலாச்சார விழாவிலும் பங்கேற்று உரையாற்றினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைப்பது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்துத் திருச்சி பயணத்தின் போது அமித்ஷா முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, 2026-இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைக்கும் என அவர் புதுக்கோட்டை கூட்டத்தில் முழங்கியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் இந்த வருகையும், அதிமுக நிர்வாகிகள் அவருக்கு அளித்த வரவேற்பும் வரும் தேர்தலுக்கான கூட்டணி உறவை உறுதிப்படுத்தும் ஒரு நகர்வாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
