சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது. இதையடுத்து, கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியை முறித்த அதிமுக, பின்னர் தேமுதிகவுடன் கைகோர்த்தது. அதே நேரத்தில், பாஜகவுடன் பாமக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரனின் அமமுக ஆகியவை இணைந்து போட்டியிட்டன. ஆனால் தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாமக, தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக ஆகியோரின் நிலைப்பாடு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி என இரண்டு அணிகளாகவே செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் இதை வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும், “10 நாளுக்குள் பிரிந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் வேலை தொடங்க வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.
இதற்கு ஆதரவாக ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டுமே ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வர முடியும். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். அதேபோல, சசிகலா, “ஒன்றுபட்ட அதிமுகவால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றுபடுவோம், வெற்றியடைவோம்” எனக் கூறியுள்ளார்.
ஆனால், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “செங்கோட்டையனின் கருத்தை மதிக்கிறோம். ஆனாலும் எங்கள் முடிவு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே” எனக் கூறியுள்ளார்.
இந்த விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், இன்று தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் தொகுதிகளில் நடைபெறும் அதிமுகவின் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேச உள்ளார். செங்கோட்டையனின் கருத்துக்களுக்கு அவர் பதிலளிக்கிறாரா எனும் எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.