அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியை விமர்சித்ததற்கு, துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதிலடி அளித்துள்ளார்.
தமிழகமெங்கும் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மதுரை ஒத்தக்கடையில் பேசியபோது,
“அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை எந்தக் கட்சியாலும் விழுங்க முடியாது. மாறாக ஸ்டாலின் தான் கூட்டணி கட்சிகளை விழுங்கிக்கொண்டிருக்கிறார். திமுக கூட்டணிக் கட்சிகள் உஷாராக இல்லையெனில், அவர்களையும் ஸ்டாலின் விழுங்கிவிடுவார்” என கூறினார்.
இதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“அதிமுகவில் இன்று நிலைமை என்னவென்றால், உறுப்பினர்கள் சந்திக்கும்போது கூட ஒருவர் எந்த அணியைச் சேர்ந்தவர் என்று தான் விசாரிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா, செல்லூர் ராஜூ, இப்போது புதியதாக உருவான செங்கோட்டையன் அணி என பிரிவுகள் அதிகரித்துள்ளன” என குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது:
“அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையே முதலில் எடப்பாடி பழனிசாமி சரி செய்ய வேண்டும். திமுக கூட்டணியை விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கள் கூட்டணி வெறும் தேர்தல் வெற்றிக்காக உருவாக்கப்பட்டதல்ல. கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்” என வலியுறுத்தினார்.
இதேவேளை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க 10 நாளுக்குள் முயற்சி தொடங்க வேண்டும். இல்லையெனில், அதனை நான் மேற்கொள்வேன்” என நேற்று (5ம் தேதி) பேசியிருந்தார். அதன் மறுநாளே அவர் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

















