கோவை: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் குறித்து திமுக நடத்திய போராட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜக மையக் குழு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ‘மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் தான் எஸ்.ஐ.ஆர்’ என கூறியுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் என்பதின் பொருள் கூட தெரியாமல் பேசுகிறார்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.
“திமுக கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கட்சி. இதற்கு முன்பு பத்து முறை எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. ஆனால் இப்போது பாஜக இதை கொண்டு வந்தது போல காட்டி போராட்டம் நடத்துவது ஆச்சரியமானது.
தங்களின் ஆட்சிப் பிழைகளை மறைக்க திமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. தேர்தலில் பாஜக அல்லது எதிர்க்கட்சிகள் வென்றால், உடனே இ.வி.எம் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதையெல்லாம் வைத்து தான் வெற்றி பெற்றீர்களா?
ராகுல் காந்தி தேர்தல் பீகாரில் நடப்பதற்கும், அரியானாவில் ‘வோட் சோரி’ எனப் பேசுவதற்கும் அர்த்தமே இல்லை. சி.எஸ்.டி.எஸ் அமைப்பு, எஸ்.ஐ.ஆர் குறித்த தங்களின் ஆய்வு சரியில்லை என்று கூறிய பிறகும் ராகுல் காந்தி அதை மகாராஷ்டிராவில் தொடர்ந்து பேசுகிறார். இது அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் செயல்,” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பேசும்போது, “அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக எந்தக் கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


















