தென்காசி: தென்காசி இடைக்கால் அருகே துரைசாமிபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூர விபத்தில், இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயம் அடைந்துள்ளனர்.
தகவலின்படி, தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிப் புறப்பட்ட பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி வருகை தந்த மற்றொரு பேருந்தும் எதிரெதிரே மோதியதில் பேருந்துகள் முற்றிலும் சேதமடைந்தன. தாக்கம் அதிகமாக இருந்ததால் சிலர் பேருந்து உள்ளேயே சிக்கி மரணமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை தீவிரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எதனால் விபத்து ஏற்பட்டது என்பதை விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாலா? அல்லது அதிவேகப் பாய்ச்சலா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே சமயம், அந்தப் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் போட்டிபோட்டு பயணிப்பது, சாலை விதிகளை மீறுவது குறித்து பயணிகள் நீண்டநாளாகவே குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் நடந்துள்ள இந்தக் கொடூர விபத்து, தென்காசி மற்றும் சுற்றுவட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
















