தனியார் பள்ளிப் பேருந்து மோதி மாடு வாங்கச் சென்ற இருவர் பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த இரு கூலித் தொழிலாளிகள், மாடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் நிகழ்ந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாக, மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானவேல் (54). இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (48). இவர்கள் இருவரும் மாடு வாங்குவதற்காக டி.ரெங்கநாதபுரம் நோக்கி, மணிகண்டன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருந்தனர்.

ஏ.வாடிப்பட்டி ஐந்து ஏக்கர் காலனி, கருப்பசாமி கோயில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த தனியார் பள்ளிப் பேருந்து, வத்தலகுண்டு பகுதியிலிருந்து பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

பேருந்து மோதிய வேகத்தில், ஞானவேல் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தேனி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். நல்ல வேளையாக, பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஜெயமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இருவரின் மரணத்திற்குக் காரணமான தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரான, வத்தலகுண்டைச் சேர்ந்த கேசவமூர்த்தி (21) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மாடு வாங்குவதற்காகச் சென்ற இரு கூலித் தொழிலாளிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம், தேவதானப்பட்டி கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version