“என் மரணத்திற்கு 2 அதிகாரிகளே காரணம்”: தாம்பரம் போக்குவரத்து ஊழியர் தற்கொலை

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்த யுவராஜ் என்ற ஜூனியர் இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ், தாம்பரம் பணிமனையில் பணியாற்றி வந்தவர். கழுத்து வலி காரணமாக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவரது விடுப்பை மேலதிகாரிகள் ஏற்காததோடு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை செய்வதற்கு முன்பு, தமிழக டிஜிபிக்கு யுவராஜ் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்துள்ளது. அதில், “என் மரணத்திற்கு இரண்டு உயரதிகாரர்களே காரணம். எனக்கு சேர வேண்டிய பணத்தை என் குடும்பத்துக்கு வழங்குடுங்கள்” எனக் குறிப்பிட்டிருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்தியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும், மருத்துவ காப்பீட்டு நிதியும் மறுக்கப்பட்டதாகவும், வேலைக்கு வரக்கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் யுவராஜ் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு மறைமலைநகர் ரயில் பாதை அருகே அவர் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து யுவராஜ் கூறிய குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், அரசு ஊழியர்களின் மனநிலை, மேலதிகாரிகளின் நடத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

Exit mobile version