மனிடோபா (கனடா) : கனடாவில் விமானப் பயிற்சியின் போது இரண்டு பயிற்சி விமானங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், இந்திய மாணவரான ஸ்ரீஹரி சுகேஷ் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மனிடோபா மாநிலத்தில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் செயல்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருப்பூணித்துறை ஊரைவாசியான ஸ்ரீஹரி சுகேஷ் (வயது 23) மற்றும் கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.
ஜூன் 8-ஆம் தேதி, இருவரும் தனித்தனியாக விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக் நகரத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு விமான நிலையம் அருகே, அவர்கள் இயக்கிய விமானங்கள் 400 மீட்டர் உயரத்தில் நேருக்கு நேர் மோதியன.
விபத்தின் தாக்கம் காரணமாக, இரு விமானங்களும் தீப்பற்றியது. இதில், ஸ்ரீஹரி சுகேஷ் மற்றும் சவானா மே ராய்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board) விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.