முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டும் திட்டம் பரிசீலனைக்கு வர உள்ளது.

திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஒப்புதல், ஜூலை 31ம் தேதி நடைபெறும் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் வழங்கப்படும் என்று தொழில்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பங்குகள் மட்டுமின்றி, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டும் முயற்சியையும் பரிசீலித்து வருகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ப்ரிவெட் பிளேஸ்மெண்ட் (private placement) வாயிலாக நடைமுறைக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களின் போக்கில், தற்போது தாழ்வாக இருக்கும் பங்கு விலை எதிர்வரும் வாரங்களில் ஏற்றமடையும் வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவன பங்கு விலை பிஎஸ்இ சந்தையில் 0.8% வீழ்ச்சியடைந்து ரூ.2,774.85 ஆக மூடுபட்டது.

Exit mobile version