”விஜய் அண்ணா… உங்களை நம்பித்தான் !” – கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்த தவெக உறுப்பினர் !

புதுச்சேரியில் இரு பிள்ளைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்த தந்தையின் உருக்கமான கடிதம் – சமூகத்தையே கலங்க வைக்கும் சம்பவம்

புதுச்சேரி:
புதுச்சேரி நெல்லித்தோப்பு பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (34), தாத்தா ஏசி சரக்கு வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழக வெற்றி கழக உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த இவர், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையில் சிக்கி மன உளைச்சலுடன் இருந்ததாகத் தெரிகிறது.

இன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடித்து வீடு திரும்பிய மனைவி மேரி அவரது பிணத்தை கண்டதும் அலறி அழுதுள்ளார். உடனே உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கடன் துயரங்களால் உழலும் வாழ்க்கை

விக்ரமன் தற்கொலை செய்யும் முன் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துள்ளார். அதில் ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு எழுதிய கடிதம்.
அதில்,

“விஜய் அண்ணா… உங்களை நம்பித்தான் உயிரை விடுகிறேன்!”
என்று தொடங்கி,
“கந்துவட்டி கொடுமையால் சித்திரவதை செய்யப்பட்டேன். எனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள். மகள் நன்றாக படிப்பாள், தயவுசெய்து படிக்க வையுங்கள்.”
என கேட்டுக்கொண்டுள்ளார்.

“10 பைசா வட்டி… நிம்மதியே இல்லாமல் போச்சு!”

மறைந்த விக்ரமன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனசேகர் என்ற நபரிடம் ரூ.3.80 லட்சம் 10 பைசா வட்டிக்கு வாங்கியதாகவும், விபத்து காரணமாக சில மாதங்கள் தவறிவிட்டதால், தனசேகர் அவரை, மனைவியையும், குழந்தைகளையும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி சித்திரவதை செய்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிப்டிக் நிறுவன ஊழியர் செல்வம் என்பவர், “ரூ.50,000 கொடு – வட்டி சேர்த்து கொடுத்தால் ரூ.1.5 லட்சம் தருகிறேன்” என சொல்லி வாகனத்தை அடமானம் வைக்க செய்து, பின்னர் தொடர்பை துண்டித்ததையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“என் உடல் உறுப்புகளைக் கூட எடுத்துக்கொண்டு என் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்!”

விக்ரமன், மரணத்துக்கு பின் கூட தனது குடும்பத்திற்கு ஏதாவது ஆதாரம் கிடைக்க வேண்டும் என எண்ணி, தனது உடல் உறுப்புகள் உதவியாக பயன்படட்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும்,

“இனிமேல் இப்படி வட்டிக்கு கொடுக்கும் கோடிகளும், கொள்கைகளும் பயப்பட வேண்டிய சூழல் வரவேண்டும், அண்ணா!”
என்று விஜய்க்கு எழுதிய கடிதம் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் விசாரணை

உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையை எதிர்த்து பலரின் கோபக்குரல் எழுந்து வருகிறது. சமூக ஆர்வலர்களும் அரசைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளனர்.

Exit mobile version