தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மாநாட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், காவல்துறையின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஒருபுறம் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற, மறுபுறம் பாதுகாப்பு ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தவெகின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
250 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரம்மாண்ட மேடை, விஜய் நடந்து செல்ல 800 மீட்டர் நீள ‘ரேம்ப் வாக்’ மேடை, குடிநீர் வசதி, எல்.இ.டி திரை உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
முதலில் 25ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்த மாநாடு, பின்னர் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஒரு பக்கம் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நேரத்தில், மதுரைக்கு விஜய்யின் வருகையை அவரது தொண்டர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அனுமதி அளிக்கபட தாமதம் ஆனால் மாநாடு தள்ளிபோகுமா என்ற சந்தேகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர்.
காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு தவெக சார்பில் பதில்கள் வழங்கப்பட்டாலும், அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதன் பகுதியாக, மாநாட்டு திடல் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களை இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், ஏடிஎஸ்பிக்கள் அன்சுல் நாகூர், திருமலைக்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பார்க்கிங் மற்றும் திடலின் பரப்பளவு குறித்து தவெக நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
இதனை முன்னிட்டு, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அனுமதி தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.