ஹவாய் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள் : ரஷ்யாவில் 73 ஆண்டுகளில் இல்லாத கடும் நிலநடுக்கம் !

பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதிகள், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. ஹவாயில் 5 அடி உயரமுள்ள அலைகள் கரையைக் கடக்கும் காட்சிகள் பதிவாகி வருகின்றன.

இன்று (ஜூலை 30) ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம், கடந்த 73 ஆண்டுகளில் பதிவானதிலேயே மிகவும் கடுமையானதாகும் என ரஷ்ய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 1952-ம் ஆண்டு இதே பகுதியில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து, ரஷ்யா, ஜப்பான், ஹவாய், அலாஸ்கா, கலிபோர்னியா மற்றும் சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதி மிகுந்த பாதிப்பு :

ரஷ்யாவின் துறைமுக நகரமான குரில்ஸ்க் பகுதியில் கடுமையான சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல படகுகள் மற்றும் சிறிய கப்பல்கள் தூக்கிச் செல்லப்பட்டன. பாதுகாப்புக்காக அங்கு வசிக்கும் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். சக்லைன் பகுதியில் சுனாமி அலைகள் கடற்கரையோர கட்டடங்களை மூழ்கடித்தன.

ஹவாயில் அவசர நிலை :
ஹவாய் தீவில் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கிய நிலையில், ஹோனலுலு நகரிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்புக்காக வெளியேறினர். தீவின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணமாக கரையோரத்தில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மையம், அலைகளின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகலாம் என எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கடற்கரை பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓபரா வின்ப்ரே உதவி:
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரே, ஹவாய் தீவில் உள்ள தனது பண்ணை வீட்டு வழியாக பொதுமக்கள் செல்ல அனுமதித்து, அவசரமாக வெளியேறும் மக்களுக்கு உதவியுள்ளார்.

அமெரிக்காவின் பதில் நடவடிக்கைகள்:
ஹவாய் மாநில கவர்னர் ஜோஷ் கிரீன் கூறுகையில், “தற்போதைக்கு சிறிய அலைகள் மட்டுமே தாக்கியுள்ளன. இன்னும் மூன்று மணி நேரத்திற்கு பிறகே நிலைமை கட்டுப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்றார்.

அதே நேரத்தில், ஓரிகன் உள்ளிட்ட அமெரிக்க மாநிலங்கள் பசிபிக் கடற்கரையோர பகுதிகளில் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எச்சரித்து, மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை:
இந்த சுனாமி அலைகள் இந்தியாவின் கடற்கரையோர பகுதிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version