வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரி சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டிரம்ப், அதிபராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு அதிக அளவில் “பரஸ்பர வரி” விதித்தார். கனடா, பிரேசில், இந்தியா, அல்ஜீரியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகள் இவ்வரிகளால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரியும், 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டதால், மொத்தத்தில் 50 சதவீத வரி உயர்வு ஏற்பட்டது.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து, அமெரிக்காவின் நியூயார்க் நகர வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்தி தீர்ப்பளித்த நீதிபதிகள்,
டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை, அதிக வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியுள்ளார், என்று கூறினர்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், மே மாதத்தில் வழங்கப்பட்ட முதற்கட்ட தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், அரசு நிர்வாகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை விதிக்கப்பட்ட வரிகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டம் என்ன ?
டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், பரஸ்பர வரிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். அந்நிலையில், ஏப்ரல் 2ம் தேதி முதல் வசூலிக்கப்பட்ட வரித் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இது அமெரிக்க அரசுக்கு பெரும் நிதிச் சவாலாக அமைய வாய்ப்பு உள்ளது.
