டில்லியில் கடந்த 6 நாட்களாக மாயமாக இருந்த திரிபுரா மாணவி ஸ்நேகா தேப்நாத் (19), இன்று யமுனா ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த ஸ்நேகா, டில்லியின் ஆத்ம ராம் சனாதன் தர்மா கல்லூரியில் B.Sc. கணிதத் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை, தனது தோழி பிதுனியாவை ரயில்நிலையத்தில் விட்டுவிட்டு வருவதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், அதன்பின் காணாமல் போனார்.
இதையடுத்து அவரது சகோதரி பிபாஷா தேப்நாத் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஸ்நேகா காலை 5.15 மணிக்கு சுபே சந்திரா என்ற டாக்ஸி ஓட்டுநருடன் சென்றது தெரியவந்தது. டாக்ஸி ஓட்டுநர், ஸ்நேகாவை வாஷிராபாத் பகுதியில் உள்ள சிக்னேச்சர் பாலத்தில் இறக்கியதாகக் கூறினார்.
இதையடுத்து, போலீசார் தேசிய பேரிடர் மீட்பு படை உதவியுடன் யமுனா ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஆறாவது நாளான இன்று, கீதா காலனி பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசிடம் ஒப்படைத்த கடிதத்தில், அவர் தற்கொலை எண்ணத்துடன் வீட்டைவிட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.
இது குறித்து போலீசார், “தற்கொலை என்று தோன்றினாலும், மற்ற எந்த சந்தேகங்களும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் டில்லி மட்டுமன்றி, மாணவியின் சொந்த மாநிலமான திரிபுராவிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.