பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் ; சர்ச்சையை கிளப்பிய திரிணமுல் எம்எல்ஏ சஸ்பெண்ட்

கோல்கட்டா: பாபர் மசூதியைப் போல ஒரு மசூதி மீண்டும் கட்டுவேன் என்ற தனது கருத்தால் மேற்கு வங்கத்தில் சர்ச்சையை கிளப்பிய திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீர், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியில், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியைப் போன்று புதிய மசூதி அமைப்பேன், டிசம்பர் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டுவேன் என கபீர் பேசியிருந்தார். மூன்று மாதங்களுக்குள் கட்டிடப் பணியை முடிப்பேன் என அவர் தெரிவித்ததும் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கபீரின் இந்த அறிவிப்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கவலை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

கோல்கட்டா மேயர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தி, “இந்த விஷயத்தில் அவர் பலமுறை எச்சரிக்கப்பட்டார். இருந்தும் கருத்தை திரும்பப் பெறத் தயங்கினார். அதனால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

இந்நிலையில், நீக்கத்துக்கு பதிலளித்த கபீர், வரும் டிசம்பர் 22ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், 2026 சட்டசபைத் தேர்தலில் 135 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Exit mobile version