மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தடையாக உள்ளது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கம், துர்காப்பூரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்வில் பல திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

துர்காப்பூர் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்குத் துணைநின்ற முக்கியமான நகரமாகும் என்றும், இங்கு நடைமுறைக்கு வந்திருக்கும் திட்டங்கள் நகரின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் மோடி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

“மேற்கு வங்கத்தில் ரயில் மற்றும் மெட்ரோ இணைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் அதிகம் இயக்கப்படும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் முக்கிய இடம் வகிக்கிறது. ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டு ரயில்வே பாலங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. துர்காப்பூர் மற்றும் ரகுநாதபூரில் தொழிற்துறை மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி முதலீடு செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.”

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும், உள்கட்டமைப்பு வளர்ச்சியே நாட்டின் மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், மேற்கு வங்கத்தை தொழில்துறை மையமாக மாற்றும் தன்னம்பிக்கையை பா.ஜ.க.வுக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் அரசு பெரிய தடையாக இருக்கிறது என்றும்,

“திரிணமுல் வீழ்ச்சியடைந்தால்தான் மேற்கு வங்கம் முன்னேறும். மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசை அகற்றி மாநிலத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்,”
எனத் தெரிவித்தார்.

மாநிலத்தில் ஏற்படும் வன்முறைகள் முதலீடுகளை விரட்டும் வகையில் உள்ளன என்றும், புதிய முதலீடுகளை ஈர்க்கக் காந்தமாக மாற மாநில அரசின் அனுகுமுறை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version