தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி

துபாயில் கடந்த 17ஆம் தேதி அல்–மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கிய ‘துபாய் ஏர் ஷோ 2025’ நிகழ்ச்சியில் உலக நாடுகளின் நவீன இராணுவ, தனியார் விமானங்கள் காட்சிப்படுத்து வந்தன. இந்தியாவைச் சேர்ந்த தேஜஸ், ரஃபேல், சூரிய கிரண் அக்ரோபாட்டிக் குழுவின் விமானங்களும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன.

நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட LCA Tejas Mk-1 விமானம் வானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கி நேராக விழுந்து வெடித்தது. விபத்திலே விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் நமன்ஷ் ஷ்யால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விமானியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

கிராமம் முழுவதும் சோகம்

ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த நமன்ஷ் ஷ்யாலின் மறைவு, அவரது சொந்த ஊரையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தினருக்கு அண்டை வீட்டார், உறவினர்கள் என்றெல்லாம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 34 வயதான ஷ்யால், திருமணமானவர்; அவருக்கு ஆறு வயது மகள் ஒருவர் உள்ளார்.

“பணிவு மிகுந்த வீரர்… எங்கள் பெருமை”

விமானியின் மைத்துனர் ரமேஷ் குமார் ஊடகங்களிடம் பேசியதில், “இளம்வயதிலேயே உயர்ந்த நிலையை அடைந்தவர். விரைவில் அவருக்கு மேலும் பதவி உயர்வு கிடைக்க இருந்தது. அனைவரிடமும் மிகுந்த பணிவுடன் நடந்துகொள்வார். அவரது இழப்பு எங்கள் குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் முழு கிராமத்திற்கே பெரிய துயரம்” என அவர் கூறினார்.

தேஜஸ் விமான விபத்தில் வீரமரணம் அடைந்த நமன்ஷ் ஷ்யாலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் மரியாதை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

Exit mobile version