அம்மாபேட்டை : சேலம் அருகே திருநங்கை ஒருவர் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். அவர் தங்க ஆசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. தம்பதிக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்களது மகன் சரவணன் (21), சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, திருநங்கையாக மாறினார். பின்னர், தனது பெயரை வனிதா என்று மாற்றிக் கொண்டார்.
தனியாக வசித்து வந்த வனிதாவை பார்க்க, நேற்று காலை 11 மணியளவில் அவரது சகோதரி மரகதம் வீட்டுக்கு வந்தபோது, அவர் இரத்தக் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். விசாரணையில், வீட்டில் 1.5 அடி நீளமான இரும்பு ராடு மீட்கப்பட்டது. அதனால், வனிதாவின் பின்மண்டை மற்றும் நெற்றியில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், வனிதா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன் என்பவரை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது நவீன் தலைமறைவாக உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பின், கொலைக்கான காரணம் வெளிச்சத்துக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
















