கர்நாடகா சாலை சோதனையில் பெருந்துயரம் : 4 வயது சிறுமி உயிரிழப்பு – 3 போலீசார் இடைநீக்கம்

மாண்டியா (கர்நாடகா) : கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் போலீசாரின் சாலை சோதனை காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூர் தாலுகா கொரவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அசோக் (32), வாணி (27) தம்பதியரின் மகளான ஹிருதீக்ஷா (வயது 4), தெரு நாயால் கடிக்கப்பட்டு காயமடைந்த நிலையில், பெற்றோர் அவசரமாக பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மத்தூர் சாலையில், ஹெல்மெட் இல்லாத வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்த போக்குவரத்து போலீசார், அசோக் செலுத்திய இருசக்கர வாகனத்தையும் திடீரென வழிமறித்தனர். இதனால் வாகனம் தடைப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ஹிருதீக்ஷா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தகவல் பரவியதும், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மாண்டியா மாவட்ட மருத்துவமனை முன் நெடுஞ்சாலையில் அமர்ந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாண்டியா போக்குவரத்து போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜெயராம், நாகராஜு மற்றும் குருதேவ் ஆகிய 3 போலீசாரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் ஆவசியமற்ற தலையீடே இந்த துயரத்திற்கு காரணமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version