நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் சில சாய ஆலைகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளைத் துச்சமென மதித்து, நள்ளிரவு நேரங்களில் ரசாயனக் கழிவுநீரைத் தடையின்றி வெளியேற்றி வருவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒட்டமெத்தை பகுதியில் செல்லும் வடிகாலில் கடந்த சில தினங்களாகக் கடும் நெடியுடன் கூடிய சாயக்கழிவுநீர் பாய்ந்து வருவது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
பள்ளிப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான சாய மற்றும் சலவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்த பின்னரே வெளியேற்ற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், செலவைக் குறைப்பதற்காகச் சில ஆலை உரிமையாளர்கள், இரவு நேரங்களைப் பயன்படுத்திச் சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனக் கழிவுகளை நேரடியாக வடிகால்களில் திறந்து விடுகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒட்டமெத்தை வடிகாலில் வழக்கத்திற்கு மாறாக அடர் நிறத்துடன், மூக்கைத் துளைக்கும் ரசாயன நெடியுடன் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நச்சு நீர், ஒன்பதாம்படி பகுதி வழியாகப் பயணித்து நேரடியாகப் புனிதமான காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், நள்ளிரவில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதோடு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இந்தச் சாயக்கழிவுநீர் கலந்த காவிரி நீரைப் பருகுவதால், ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்குப் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் புகார் அளித்தால் மட்டுமே பெயரளவிற்கு ஆய்வு நடத்துகின்றனர். மற்ற நேரங்களில் ஆலைகளின் விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் ஆலை உரிமையாளர்களுக்குத் துணிச்சல் அதிகரித்துவிட்டது,” என வேதனை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு, ஒட்டமெத்தை மற்றும் ஒன்பதாம்படி பகுதிகளில் தணிக்கைச் சாவடிகளை அமைப்பதோடு, விதிகளுக்குப் புறம்பாகக் கழிவுநீரை ஆற்றில் கலக்கும் ஆலைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் கழிவு கலப்பதைத் தடுக்கத் தவறினால், பெரும் போராட்டங்களை முன்னெடுக்கவும் மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
