தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவு : அரசு பள்ளி மாணவியர் 4 பேருக்கு மூச்சுத்திணறல்

கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் நான்கு மாணவியர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சித்தராஜகண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 168 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு மாணவியர் வகுப்பறை அருகில் தனியார் இரும்பு தொழிற்சாலை அமைந்துள்ளது.

கல்வி ஆண்டு தொடங்கியதிலிருந்து மதியம் தொழிற்சாலையிலிருந்து வாயு வெளியேறும் போதெல்லாம் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பள்ளி நிர்வாகம் பலமுறை தொழிற்சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் வாயு கசிந்ததால், பத்தாம் வகுப்பு மாணவியரான காயத்ரி, தாரகேஸ்வரி, யுவஸ்ரீ , ஸ்ருதி ஆகியோருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில் தாரகேஸ்வரி, ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். காயத்ரி மற்றும் யுவஸ்ரீ ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஸ்ருதி மட்டும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். “புகார் கிடைத்துள்ளதால், சிறப்பு கருவிகள் மூலம் தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version