கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பருவமழைக்கு பிந்தைய இதமான சீதோஷ்ண நிலை மற்றும் ‘குளுகுளு’ சீசன் நிலவுவதால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வால்பாறையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் வால்பாறையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டு ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு பூங்கா, சக்தி – தலனார் சாலையில் உள்ள வியூ பாயிண்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை மற்றும் அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட இடங்களை உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக, நல்லமுடி காட்சி முனையில் நிலவும் இயற்கை எழிலைக் காணப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. “சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; குப்பைகளைத் திறந்த வெளியில் வீசி வனப்பகுதியின் தூய்மையைக் கெடுக்க வேண்டாம்” என நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இருப்பினும், வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சில அதிருப்திகளும் நிலவுகின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நபர் ஒருவருக்கு 50 முதல் 100 ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். “குடும்பத்துடன் வரும் எங்களுக்கு முறையான வாகன நிறுத்துமிட வசதி (Car Parking) இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் வால்பாறையில் ஒரு பிரத்யேக ‘சுற்றுலா தகவல் மையம்’ அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்” எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் முக்கியச் சந்திப்புகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே உள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் இது தென்னிந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக மேலும் மிளிரும் என்பதில் ஐயமில்லை.
















