ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடிவேரி தடுப்பணை, தற்போது நிலவும் அசாதாரணக் காலநிலை மற்றும் நீர்வரத்து மாற்றத்தால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரானது, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் பாய்ந்து ரம்மியமான அருவியாகக் கொட்டுவது வழக்கம். சமதளத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாகக் குளிக்க முடியும் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
ஆனால், தற்போது மார்கழி மாதம் பிறந்தது முதல் தமிழகம் முழுவதும், குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் உறையவைக்கும் பனிப்பொழிவு காரணமாக, அருவி மற்றும் ஆறுகளில் இறங்கப் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே கொடிவேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று கொடிவேரிக்கு வந்த ஒரு சில பயணிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அணையில் இருந்து பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மாற்றியமைக்கப்பட்டதால், தடுப்பணையின் மீது தண்ணீர் வழிந்தோடி அருவியாகக் கொட்டவில்லை. காய்ந்த பாறைகளாகக் காட்சியளித்த தடுப்பணையைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர். மக்கள் கூட்டம் இல்லாததால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தடுப்பணை வளாகம், பூங்கா மற்றும் ஆற்றில் படகு சவாரி நடைபெறும் பரிசல்துறை ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. இதனை நம்பி கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளும் வியாபாரமின்றித் தவித்து வருகின்றனர்.

















