கொடைக்கானலில் மழையில் நனைந்தபடி செல்ஃபி எடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழையும், சாரல் மழையும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வருவதால், நீரோடைகள் மற்றும் முக்கிய அருவிகளுக்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கொடைக்கானலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெள்ளி நீர் வீழ்ச்சி (Silver Cascade) அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, கடந்த இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் மலைப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களிலும் நீர் மட்டம் உயர்ந்து, நீரோடைகள் மற்றும் ஆறுகள் மூலம் வெள்ள நீர் வீழ்ச்சிக்கு அதிக நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தண்ணீர் செங்குத்தாகக் கீழே கொட்டும் இந்த அருவி, தற்போது தனது முழு கொள்ளளவை எட்டி, மிகுந்த சலசலப்புடன் காட்சியளிக்கிறது.

வெள்ளி நீர் வீழ்ச்சியின் இந்த அரிய காட்சியைக் காண்பதற்காகப் பெருமளவில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். ஒருசில சுற்றுலாப் பயணிகள், கொட்டும் மழையில் நனைந்தப்படியே, அருவிக்கு மிக அருகில் சென்று அதன் ஆர்ப்பரிக்கும் நீரின் முன்பாக நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்துத் தங்களின் மகிழ்ச்சியைப் பதிவு செய்து வருகின்றனர்.

மலைப் பகுதியில் மழை நீடிப்பதால், நிலவும் குளிர்ந்த வானிலையும், அடர்ந்த பனி மூட்டமும் சுற்றுலாப் பயணிகளுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளி நீர் வீழ்ச்சி மட்டுமின்றி, கொடைக்கானலைச் சுற்றியுள்ள மற்ற அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version