உத்தரகண்ட் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து கோல்திர் பகுதியில் நடந்துள்ளது. அலக்நந்தா ஆற்றை கடந்து சென்ற பயணிகள் டெம்போ டிராவலர் வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. அப்போது வாகனத்தில் மொத்தம் 18 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர். இதில் ஒருவரது உயிரிழப்பு உறுதியாகியுள்ளதுடன், 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதில் மிகுந்த வருத்தம் அடைந்தேன். நிவாரண மற்றும் மீட்பு பணிகள் போர் நிலை அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.