‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் !

சென்னை :
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இன்று சென்னையில் தனது நீண்ட நாள் காதலி அகிலாவைத் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட நிலையில், திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

அபிஷன் ஜீவிந்த் இயக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம், கடந்த மே மாதத்தில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது முதல் படத்திலேயே அபிஷன் கவனம் ஈர்த்தார்.

அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மேடையில் தன் பள்ளித் தோழியும், காதலியுமான அகிலாவிடம் “திருமணம் செய்ய சம்மதமா?” என்று கேட்டு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்போது இரு குடும்பங்களின் சம்மதத்துடன், அபிஷன் – அகிலா திருமணம் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடைபெற்றது.

நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா விஜயன், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின், தனது உதவி இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அபிஷன் ஜீவிந்த். அந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version