“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா ? மக்களை அடித்து விரட்டுவதற்கா ?” – அன்புமணி கடும் கண்டனம்

ராணிப்பேட்டை: “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த முதியவரை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது” என பாமக செயல்தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், தனது மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய முதியவர் திருவேங்கடத்தை, அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதை கடுமையாக கண்டித்த அன்புமணி தனது அறிக்கையில் கூறியதாவது :

“மனு கொடுத்த முதியவரை அதிகாரிகள் தாக்கியது மனிதத் தன்மையற்ற செயல். இதற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால், கேள்வி கேட்டவர்களை அடித்து விரட்டுவதற்கான முகாமாக மாறியுள்ளது.

திட்டம் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 35 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 90 சதவீத மனுக்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்த 20 லட்சம் பெண்களுக்கு இதுவரை உரிய தொகை வழங்கப்படவில்லை. இது திட்டம் முழுமையாக தோல்வியடைந்ததற்குச் சான்றாகும்.

அதிகாரிகள் மக்களை மதிக்காமல் அடக்குமுறையில் நடந்து கொள்வது கடுமையான குற்றம். மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்,” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Exit mobile version