திருப்பூர் குப்பை கிடங்கு விவகாரம்: அண்ணாமலை கைது

திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை இடுவாய் மற்றும் சின்னகாளிபாளையம் பகுதிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வருகையால் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அண்ணாமலை மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் சுமார் 600 முதல் 700 டன் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலமாக முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டி வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இடுவாய் மற்றும் சின்னகாளிபாளையம் கிராமங்களில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிகமாக குப்பைகளைக் கொட்ட முடிவெடுக்கப்பட்டது.

நீதிமன்றம் சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் இதற்கு அனுமதி அளித்திருந்தாலும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்டுவதில்லை என்றும், இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த பல மாதங்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நேற்று முன்தினம் குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளைத் தடுப்பதற்காக கிராம மக்கள் திரண்டபோது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் உட்பட பலருக்குக் காயம் ஏற்பட்டது. “மாநகராட்சி குப்பைகளை எங்கள் கிராமங்களில் கொட்டி நரகமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்” என மக்கள் முழக்கமிட்டனர். இந்த மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூர் வருகை தந்தார். திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அவர் முயன்றபோது, காவல்துறையினர் அனுமதியில்லை எனக் கூறி தடுத்தனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இறுதியில் அண்ணாமலை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக குப்பை மேலாண்மை சிக்கலில் இருப்பதால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஒருபுறம் சுகாதாரச் சீர்கேடு, மறுபுறம் கிராம மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் என இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் சூடுபிடித்துள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடித் தீர்வு காணத் தவறினால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version