திருப்பூர் அதிமுக மும்முனைப் போட்டி மாஜி அமைச்சர், மாஜி எம்.எல்.ஏ மனைவி இடையே கடும் மல்லுக்கட்டு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்களைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாகத் தொழில் நகரமான திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளில், திருப்பூர் தெற்கு தொகுதியைக் கைப்பற்ற அதிமுகவில் தற்போது ‘மூவர் அணி’ இடையே மல்யுத்தமே நடப்பதாகத் தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி, சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ள பகுதி என்பதால், அங்குப் போட்டியிட பாஜக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவினர் இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்கக் கோரி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தற்போது நிலவும் மும்முனைப் போட்டியில் முதல் நபராக, ஜெயலலிதா பேரவையின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் அட்லஸ் லோகநாதன் களம் இறங்கியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் தீவிரப் பணியாற்றி வருகிறார். மற்றொரு புறம், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனின் மனைவி கவிதா குணசேகரன், தனது கணவர் செய்த மக்கள் பணிகளைச் சுட்டிக்காட்டி விருப்ப மனு அளித்துள்ளார். முன்னாள் கவுன்சிலரான இவருக்குப் பெண்கள் மற்றும் பழைய தொண்டர்களின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த இருவருக்கும் சவாலாக, முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், இந்த முறை தனது கவனத்தைத் திருப்பூர் தெற்கு பக்கம் திருப்பியுள்ளார். பல்லடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடக் கரைப்புதூர் நடராஜன் தரப்பு தீவிரம் காட்டி வருவதாலும், மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருப்பதாலும், பாதுகாப்பான இடமாகத் தெற்கு தொகுதியை ஆனந்தன் குறிவைத்துள்ளார். இருப்பினும், அதிமுகவின் மாநகர் மாவட்டச் செயலாளரும் மூத்த தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் யாருக்குப் பச்சைக்கொடி காட்டுகிறாரோ, அவரே வேட்பாளராகக் களம் இறங்குவார் என்பதால், கட்சித் தலைமை மற்றும் மாவட்டத் தலைமையின் முடிவை நோக்கி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த உள்வீட்டுப் போட்டி அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version