திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அவ்வப்போது அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன் படி அடுத்த ஒரு மாதத்திற்கு செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர உற்சவங்கள் நடைபெற துவங்கி விட்டன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தற்போது வார நாட்களில் 70,000 முதல் 80,000 வரையிலான பக்தர்களும், வார இறுதி நாட்களில் 90,000க்கும் அதிகமான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 29ம் தேதி திருப்பதியில் கருட பஞ்சமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பெளர்ணமி கருட சேவை நிறைவடைந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் கருட சேவை நடைபெற உள்ளது. கருட பஞ்சமி அன்று மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி துவங்கி, திருப்பதியில் சலகட்ல பிரம்மோற்சவம் எனப்படும் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் இப்போதே துவங்கப்பட்டு விட்டன. வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி புஷ்கரணியில் புனரமைப்பு பணிகள் ஜூலை 20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. வழக்கமாக சலகட்ல பிரம்மோற்சவத்தின் போது புஷ்கரணியில் புனரமைப்பு பணிகள் நடத்தப்படும். பிரம்மோற்சவம் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கருதுவதால் இந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் முன் கூட்டியே துவங்கப்பட்டு விட்டன.
புனரமைப்பு பணிகள் நடைபெறும் இந்த ஒரு மாத காலமும் புஷ்கரணி ஆரத்தி நடைபெறாது. அதே போல் பக்தர்களும் ஜூலை 20 துவங்கி, ஆகஸ்ட் 19ம் வரை புஷ்கரணியில் நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் சமயத்தில் புஷ்கரணி மூடப்படுவது பக்தர்களுக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருப்பதியில் ஜூலை 17ம் தேதி 63,897 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் ஜூலை 18ம் தேதி 73,093 பேரும், ஜூலை 19ம் தேதி 90,011 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதியில் சராசரியாக சர்வ தரிசனத்திற்கு 12 முதல் 14 மணி நேரம் ஆகிறது. நாராயண கிரி ஷெட் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருப்பதி செல்லும் பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராட வேண்டும் என்றால் அதற்கு இன்னும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த மாற்றங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.