மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளின்போது, அறிந்தோ அறியாமலோ அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்யும் தவறுகளால் நிகழும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆகம விதிகளின்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டின் பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, பவித்ர மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு வைதீக காரியக்கிரமங்கள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
வேத பண்டிதர்கள் பஞ்ச சூக்தங்களை பாராயணம் செய்தனர். பின்னர் பவித்ர பிரதிஷ்டை நடந்தது. சுவாமி மற்றும் தாயார்களுக்கு விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது.
மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவில் நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் யாகசாலையில் வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளான நேற்று பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி,ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு ஸ்னாபன திருமஞ்சனம் செய்யப்பட்டு, பின்னர் வண்ணமயமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாட்டில் திருமலை பீடாதிபதிகள், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை அதிகாரி லோகநாதன் மற்றும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பவித்ரோற்சவத்தின் கடைசி நாளான இன்று (7.8.2025) பவித்ர பூர்ணாஹூதியுடன் சிறப்பு பூஜை நிறைவுபெறுகிறது