நெல்லை: வெள்ளம் வடிந்த நிலையில் விவசாயப் பணிகள் தீவிரம்

 நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தணிந்துள்ள நிலையில், தற்போது நிலவும் சாதகமான காலநிலையால் மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் ஏமாற்றம் அளித்தாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கடந்த வாரம் பெய்த தொடர் மழை மாவட்டத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. குறிப்பாகப் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து சதம் (100 அடிக்கு மேல்) அடித்துள்ளது. இது வரவிருக்கும் சாகுபடி காலத்திற்குப் போதிய தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. தொடர் மழையினால் தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் சில இடங்களில் சேதமடைந்தன. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயப் பணிகள் முடங்கிக் கிடந்தன.

தற்போது மழை ஓய்ந்து, கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் வெயில் அடித்து வருவதால், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த விவசாயப் பணிகளை விவசாயிகள் தற்போது உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான: அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் சேரன்மகாதேவி, மானூர் பாளையங்கோட்டை, சீவலப்பேரிஉள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வயல்களில் தொளியடிப்பது, நாற்று நடுவது, களை எடுப்பது மற்றும் உரமிடுவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அணைகளில் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version