திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்து கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி :
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா, கடந்த ஜூலை 31-ஆம் தேதி தனது மகளுடன் வீட்டில் தனியாக இருந்த போது, பர்தா அணிந்த மர்ம நபர் ஒருவர் ‘திருமண பத்திரிக்கை வைக்க வந்தேன்’ என கூறி வீட்டுக்குள் நுழைந்தார். அவருக்கு கணவரின் தெரிந்தவர் என நம்பிய சுல்தானா, அவரை வீட்டுக்குள் அனுமதித்தார்.
அதன்பின், குடிக்க தண்ணீர் கேட்டபோது அவர் திடீரென கத்தியை எடுத்து சுல்தானாவை மிரட்டி, நகையும் பணமும் கேட்டார். அவ்வழியே அவரது உண்மையான முகம் வெளிவந்தது. அவரின் குரலையும் நடையையும் பார்த்த சுல்தானா, பர்தா அணிந்தவர் பெண் அல்ல, ஆண் என்பதையும் உணர்ந்தார்.
கொள்ளை விவரம் :
பின்னர் சுல்தானாவின் மகள் கத்தி கூச்சலிட, இருவரின் வாயிலும் துணி கட்டி, அறையில் பூட்டி வைத்தான். வீடு முழுவதும் தேடிய திருடன், பீரோவை உடைத்து மகளுக்காக வைத்திருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
விசாரணை மற்றும் கைது :
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி தன்வீர் அகமது என உறுதி செய்யப்பட்டது. அவர் சுல்தானாவின் தங்கை கணவர் ஆவார். பின்னர் கைது செய்யப்பட்ட தன்வீர், திருட்டை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து கொள்ளை நகைகள் மீட்கப்பட்டன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.