“அரசியல் பழிவாங்கல் தான் இது !” – மைத்துனருக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி !

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இதை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்ற நில மோசடி வழக்கில், ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, வதேராவுக்குச் சொந்தமான 43 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை ராகுல் “அரசியல் பழிவாங்கும் செயல்” எனக் குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனர் இந்த அரசால் துரத்தப்பட்டு வருகிறார். இது அரசியல் வன்முறையின் தொடர்ச்சி. ராபர்ட் வதேரா, பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் நானும் துணையாக இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இத்தகைய நெருக்கடிகளை அவர்கள் தைரியமாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வார்கள். உண்மை என்பது எப்போதும் கடைசியில் வெல்லும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version