டாக்கா: மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்த நிலையில், இந்தத் தீர்ப்பு அரசியல் நோக்கத்துடனும் பாரபட்சத்துடனும் வழங்கப்பட்டதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், ஷேக் ஹசீனா 3 பக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசால் வழிநடத்தப்படும் “மோசடி தீர்ப்பாயம்” தான் இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “எனக்கு எதிரான இந்த தீர்ப்புகள் அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டவை. மரண தண்டனை மூலம் வங்கதேசத்தின் அரசியல் அமைப்பை தகர்த்தெறியும் முயற்சிதான் இது. என்னையும், அவாமி லீக் கட்சியையும் அரசியல் அரங்கில் இருந்து நீக்குவதற்கான தீவிரவாத மனப்பான்மையுள்ள நபர்களின் திட்டமிது” என்றார்.
மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் முழுமையாக நிராகரித்துள்ளார். “மனித உரிமைகளை காக்கும் பணியில்தான் என் அரசு செயல்பட்டது” தனது ஆட்சிக்கால சாதனைகளை பட்டியலிட்ட அவர், மியான்மர் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம், மின்சாரம், கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தல், 15 ஆண்டுகளில் 450% ஜிடிபி வளர்ச்சி, வறுமையை குறைக்கும் பல்வேறு திட்டங்கள் என பல நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவித்தார்.
வங்கதேசத்தை 2010ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைக்க வழிவகுத்ததும் தாம் தான் எனவும், மனித உரிமைகள் மீதான அக்கறையுடன் தான் தனது அரசு செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், “எனக்கு எதிராக எந்த உண்மையான ஆதாரமும் இல்லை. முகமது யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மரண தண்டனை தீர்ப்பைத் தொடர்ந்து வங்கதேச அரசியலில் பெரிய பரபரப்பு நிலவுகிறது.



















