அயோத்தி: ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. கொடியேற்ற விழாவில் பேசுகையில், “இது ஒரு கொடி மட்டுமல்ல; இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொடியேற்றத்திற்குப் பிறகு உரையாற்றிய அவர் கூறியதாவது :
“அயோத்தி ராமர் கோவில் விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ராம பக்தர்கள் ஆன்மிக உணர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
“இன்று ஏற்றப்பட்ட காவி கொடி வாய்மை வெல்லும் என்பதை நினைவூட்டுகிறது. அது ஒற்றுமை, தெய்வீகம், மற்றும் ஆன்மீகச் சக்தியைப் பிரதிபலிக்கிறது. அயோத்தி தனது வரலாற்றில் மறுமொரு புதிய யுகத்தை இன்று தொடங்கியுள்ளது. ராமர் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் சப்த மண்டபத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”
“21ஆம் நூற்றாண்டின் அயோத்தி மனிதகுலத்திற்கு புதிய முன்னேற்றத்தின் பாதையை காட்டுகிறது. இங்கு நடைபெறும் முன்னேற்ற மாற்றங்கள், இந்தியாவின் வளர்ச்சித் தூணாக எழுந்துள்ளன,” என அவர் கூறினார்.
“ராமர் அனைவரையும் உணர்ச்சியின் மூலம் இணைப்பவர்; பிறப்பு, பரம்பரை, சமூகம் என எந்த வேறுபாடுகளையும் அவர் பார்க்கவில்லை. பக்திதான் அவருக்கு முக்கியம்,” என்றார்.
2047 நோக்கி… கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து பிரிவினரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், “நாடு சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகள் நிறைவு காணும் 2047க்கு முன், அனைவரின் பங்களிப்பாலும் ஒரு முன்னேற்றமான இந்தியாவை உருவாக்குவோம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “உலகிற்கு அமைதியும் செழிப்பும் வழங்கிய ராமராஜ்யத்தின் சின்னமான கொடி, இன்று அயோத்தி கோயிலின் உச்சியில் மீண்டும் உயர்த்தப்பட்டது. இந்த கோயிலின் கட்டுமானம் 500 ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் நிறைவேறியது,” என்றார்.
“ராமர் கோவில் கனவை நனவாக்க பலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களின் ஆன்மாக்கள் இன்று அமைதியடைந்திருக்கும். கொடியின் காவி நிறம் தர்மத்தைக் குறிக்கிறது. இந்த உயர்ந்த கொடியை நிறுவுவது, கோவில் கட்டுமானம் போல் பெரும் முயற்சியாக அமைந்தது,” என அவர் பகிர்ந்தார்.
















