திருவண்ணாமலை :
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆனி பிரம்மோற்சவம் (தட்சணாயன புண்ணியகாலம்) இந்தாண்டு ஜூலை 7-ம் தேதி திங்கட்கிழமை காலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கவுள்ளது.
இதற்கான முன்னோடி நிகழ்வாக, ஜூலை 6-ம் தேதி கோவிலில் விநாயகர் உற்சவம் நடைபெறும். தொடர்ந்து, ஜூலை 7-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணி வரையிலான சுபஹூர்த்தத்தில், வேத மந்திரங்களுடன் சிவாச்சாரியார்கள் கொடியேற்றச் சடங்குகளை நடத்துவர்.
இந்த நிகழ்வில், அலங்காரத் தோற்றத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோர் வீதியுலா வருகை தரவுள்ளனர்.
விழா குறித்த சிறப்பு பூஜைகள் ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.