திருவள்ளூர்:
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், மத்திய பாஜக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்காமல் இருப்பதை கண்டித்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. சசிகாந்த் செந்தில்,
“தமிழக மாணவர்களுக்கு உரிய கல்வித் தொகையை மத்திய பாஜக அரசு அரசியலமைப்பிற்கு விரோதமாக நிறுத்தி வைத்துள்ளது. உடனடியாக SSA நிதியை விடுவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கான போராட்டம்” எனக் கூறினார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திர காலத்திலிருந்து அறவழி போராட்டம் நடத்தி சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் பாரம்பரியத்தையே பின்பற்றி நான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன். கல்வி என்பது பேரம் பேசப்படும் பொருள் அல்ல; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அரசியலமைப்புச் சாசன உரிமை. அரசியல் காரணங்களுக்காக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாஜக அரசு சீரழிக்க முயற்சிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும், சமூகநீதி அமைப்புகளும், தமிழ்நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.