மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே இந்து அமைப்பினர் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் தூண், தீபத்தூண் அல்ல, அது நில அளவைக்காக நிறுவப்பட்ட சர்வே தூண் தான் என்று இந்திய நில அளவைத் துறை (Survey of India) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பதில் அளித்துள்ளது. தற்போது இந்த பதில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஏற்கனவே நிலவி வந்த சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் தூண் உள்ளது. இருப்பினும், பாரதிய ஜனதா மற்றும் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் மற்றொரு தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் உள்ள தூணானது, பல தொல்லியல் ஆதாரங்களின்படி, சர்வே கல் தூணே தவிர, வழிபாட்டுடன் தொடர்புடைய தீபத்தூண் அல்ல என்று தொடர்ந்து ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவர், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம், மலை உச்சியில் உள்ள அந்தத் தூண் குறித்து இந்திய நில அளவைத் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய நில அளவைத் துறை அதிகாரபூர்வமாகப் பதில் அளித்தது. அந்தப் பதிலில், “திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல் தான். 1808-09 மற்றும் 1871ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த RTI பதில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த பதில், மலை உச்சியில் உள்ள தூண் குறித்து நீதிமன்றத்தில் நிலவி வரும் விவாதங்களுக்கு ஒரு கூடுதல் ஆவணமாக முக்கியத்துவம் பெறுகிறது.
















