மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலையில், வழக்கமான இடங்களில் மட்டுமின்றி, ‘தீபத்தூண்’ என்று கூறப்படும் இடத்திலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மீண்டும் பரபரப்பான விசாரணைக்கு வந்தது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, “திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது காவல்துறையின் கடமை” என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல்துறை ஆணையர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால், மனுதாரர் உட்பட 10 பேரை அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற பாதுகாப்பு அளிக்க, உயர் நீதிமன்ற சி.ஐ.எஸ்.எஃப். கமாண்டன்டிற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. காவல்துறை ஆணையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன் அவர்கள் வாதங்களை முன்வைத்தார். அட்வகேட் ஜெனரல் ராமன் தனது வாதத்தில், “இது ஒன்றும் பொதுநல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்தூண் இருந்ததா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்தூண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பாக பிரிவி கவுன்சில் தீர்ப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து கோயில் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரானைட் தூண்” என்று தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “மலை உச்சியில் இருப்பது கிரானைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது?” என்று கேள்வி எழுப்பினர். கோயில் தரப்பு வழக்கறிஞர், “பல புகைப்படங்களைப் பார்த்துப் பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்” என்று பதில் அளித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “இது சர்வே கல்லா? தீபத்தூணா? விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதை கூற முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆய்வுகள் தேவைப்படுவதால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமர்வு வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கு, தொன்மையான கோயில்கள் மற்றும் அவற்றின் கட்டுமானங்கள் குறித்த வரலாற்று மற்றும் சட்டப் பூர்வமான விவாதத்தை கிளப்பியுள்ளது.
















