மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய வேண்டிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில், நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாகவும், காவல் துறையுடன் இணைந்து சி.ஐ.எஸ்.எப் செயல்பட முடியாது என்றும் தமிழக அரசு வாதிட்டது. மேலும், அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்ததாகவும் அரசு தரப்பு கூறியது.
அதே நேரத்தில், நேற்று திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட மோதல் காட்சிகளை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்பது தெளிவில்லை என்றும் அரசு தெரிவித்தது.
வழக்கில் தர்கா நிர்வாகம் சார்பில், கோயில் நிர்வாகத்தை தவிர்த்து மனுதாரருக்கு தீபமேற்ற அனுமதி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும் முன்வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தூண் பாரம்பரிய தீபத்தூண் அல்ல, வெளிச்சத்திற்கான அமைப்பு மட்டுமே எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அறநிலையத் துறையும், தீர்ப்பு வழக்கமான நடைமுறைக்கு முரணானது என வாதித்தது. 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லையென்பதை நீதிபதி சுவாமிநாதனே ஏற்றுக்கொண்டதாகவும் துறை சுட்டிக்காட்டியது.
எல்லா தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மதுரை ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், அரசு உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக சி.ஐ.எஸ்.எப்-ஐ பயன்படுத்தியது தவறல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்துடன் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பார் என்று அமர்வு தீர்ப்பளித்தது.
